எலும்புச் சிதைவு நோய் – பெண்களின் எதிரி

எலும்புச் சிதைவு நோய் (Oestioporosis) உலகம் முழுவதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது.

மனித உடல் கட்டமைப்பிற்கும், மிடுக்கான தோற்றத்திற்கும், உறுதிக்கும் அடிப்படையாக அமைவது எலும்புகள். மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.

இப்படிப்பட்ட எலும்பில் குறைபாடுகளோ அல்லது நோய்த் தாக்கமோ ஏற்பட்டால் உடலின் தன்மையும், தோற்றமும் மாறிவிடும்.

அந்தவகையில் எலும்புகளைப் பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக எலும்புச் சிதைவு நோய் (Oestioporosis) உள்ளது.

எலும்புச் சிதைவு நோய் ஏற்படக் காரணங்கள்

எலும்புச் சிதைவு குறைபாடு முக்கியமாக வைட்டமின் -D குறைப்பாட்டினால் ஏற்படுகிறது.

கால்சியம் சத்தினை உடல் ஏற்றுக் கொள்வதற்கு வைட்டமின் -D அவசியமாகும்.

போதுமான அளவு கால்சியம் உடலுக்கு கிடைக்காதபோது கால்சியம் மிகுதியாக அடங்கியுள்ள எலும்புகளிலிருந்து உடலானது கால்சியத்தைப் பெற்றுக் கொள்கிறது. இதனால் எலும்பானது வலுவிழக்கிறது.

மேலும் ஆண்களுக்கு டெஸ்ட்ரோஸ்ட்ரான் மற்றும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஆகிய பாலின சுரப்புகளில் ஏற்படும் குறைபாடுகளினாலும் எலும்புச்சிதைவு ஏற்படுகிறது.

எலும்புச் சிதைவினால் எலும்பின் கட்டுறுதியும்,அடர்த்தி மற்றும் பருமனும் குறையும். எளிதில் நொறுங்கக்கூடிய அல்லது முறிவு ஏற்படக்கூடிய நிலையில் எலும்புகளில் மாற்றம் ஏற்படும்.

இந்நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் எலும்புச் சிதைவு நோய் தாக்கும் அபாயம் அதிகம்.

தைராய்டு மற்றும் பாரா தைராய்டு குறைபாடும் ஒரு காரணமாக அமையலாம். புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ள ஆண்களும் இந்நோயின் பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகம்.

எனவே வருடத்திற்கு ஒருமுறை பெண்கள் எலும்பின் அடர்த்தியை அறியும் சோதனையான டெக்ஸா(DEXA) வை செய்து கொள்வது அவசியமானது.

பாதிப்பின் நிலையைப் பொறுத்து இந்நோயானது இரண்டு வகைகளாக அறியப்படுகிறது.

1.ஆஸ்டியோபீனியா (மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர் சிகிச்சை, மருந்துகளால் குணப்படுத்தலாம்)

2.ஆஸ்டியோபோரோசிஸ் (மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை, இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி மென்மையான உடற்பயிற்சிகள் கொண்ட சிகிச்சை)

இந்நோய்த் தாக்கத்திற்கு முதலில் ஆட்படுவது தண்டுவட எலும்புகள்தான். பின்னர் இடுப்பு மற்றும் மூட்டு எலும்புகள் படிப்படியாக பாதிப்பிற்குள்ளாகும்.

பாதிப்பின் அறிகுறிகளாக உடற்சோர்வு, களைப்பு, எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி, தசைவலி, உடல் தோரணையில் மாற்றம் ஆகியன உண்டாகும்.

எலும்புச் சிதைவு நோய்க்கு செய்ய வேண்டியவை

இந்நோய் பாதித்தவர்கள்  கடுமையான உடல் இயக்கம் சார்ந்த பணிகளான‌ அதிக எடை தூக்குதல், குதித்தல், துள்ளுதல், வேகமாக ஓடுதல் ஆகிய செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கால்சியம் அதிக அளவில் அடங்கிய உணவுப் பொருட்களான கேழ்வரகு, பால், ஓட்ஸ், காலிபிளவர், பீன்ஸ், தயிர், பாதாம், கீரைவகைகள், முள்ளங்கி, மக்காச்சோளம் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சூரிய ஒளியில் வைட்டமின் D மிகுதியாக இருப்பதால் குறைந்தது ஒரு நாளைக்கு 15 நிமிடங்களாவது சூரிய ஒளி படும்படி பார்த்துக்கொள்வது சிறந்த பலன் தரும்.

அதிக  நோய்  பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பிசியோதெரபி  சிகிச்சை மிகுந்த பலன் தரும்.

தண்டுவட பாதிப்பு மற்றும் வளைந்து கூன் விழுவதைத் தடுக்கவும், உடல் தோரணையை மேம்படுத்தவும்,  எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெற சில எளிய உடற்பயிற்சிகளையும், வலி போக்கும்  சிகிச்சைகளையும்  பிசியோதெரபி  மருத்துவர்  அளிப்பார்.

போதிய நோய் பற்றிய விழிப்புணர்வும், சத்தான உணவு வகைகளும், முழுமையான தொடர் மருத்துவ, இயன்முறை சிகிச்சைகளும் மேற்கொண்டால் இந்நோய்த் தாக்கத்திலிருந்து  விடுபட்டு  மகிழ்வுடன் வாழலாம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post