நம் உடலில் இருக்க கூடிய அதிகப்படியான நீரையும் நச்சுக்களையும் வெளியேற்ற கூடிய மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். உடலில் இரத்த அழுத்தம், ஹார்மோன் சுரப்பு, எலும்புகளின் வளர்ச்சி என பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்க கூடியது சிறுநீரகம். மாறி வரும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இன்று பலரும் சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான ஐந்து காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1.சிறுநீர் அடக்குவது
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே சிறுநீர் கழிக்காமல் அதனை அடக்கி வைப்பது. இதனால் சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தம் உண்டாகும். மேலும் சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று போன்ற பிரச்சனைகள் உண்டாகி சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
2. வலி நிவாரணி மாத்திரைகள் அதிகம் பயன்படுத்துவது
கை வலி, கால் வலி, மூட்டு வலி போன்ற காரணங்களுக்காக மருத்துவரின் ஆலோசனை இல்லாமலே தொடர்ந்து மாத்திரைகள் வாங்கி எடுத்து கொள்வர். இது போன்ற அதிகப்படியான வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வதினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
3. போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது
தினமும் தாகத்திற்கு ஏற்ப போதிய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போது உடலில் நீர் வறட்சி உண்டாகும். இதனால் சிறுநீரகங்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் கழிவுகள் தேங்கி விடுவதால் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு உண்டாகி அதன் செயலிழப்பு ஏற்படுகிறது.
4. கட்டுப்பாடு இல்லாத இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை
அதிக இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை உடலின் நரம்புகளை பாதிக்கும். குறிப்பாக சிறுநீரகத்தில் இருக்கும் நெஃப்ரான் என்று சொல்லப்படும் மெல்லிய நரம்புகளை மிக எளிதில் பாதிக்கும். இதன் விளைவாகவும் சிறுநீரகங்களில் பாதிப்பு உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.
5. அடிக்கடி ஏற்படும் சிறுநீர் தொற்று
ஒன்று அல்லது இரண்டு முறை சிறுநீர் தொற்று ஏற்படுவது தவறல்ல. ஆனால் அடிக்கடி ஏற்படும் போது அதனை அலட்சியமாக விட்டு விட கூடாது. முறையான சிகிச்சை எடுத்து அதனை பூரணமாக குணமாக்க வேண்டும். இந்த சிறுநீர் தொற்றை முறையாக சிகிச்சை செய்யாவிட்டாலும் கூட சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்து விடும்.
Post a Comment